Tuesday, April 21, 2015

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்

பிரவுசர் வழியாக இணையத்தை நாடுகையில், இணைய தளங்களைத் திறக்க முற்படுகையில் நமக்குப் பலவகையான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளைப் பார்த்தவுடன், ”அவ்வளவுதான், இந்த இணைய தளம் சரியில்லை.

நம்மால் அணுக முடியாது” என்று முடிவு செய்து விலகிவிடுகிறோம். ஆனால், அந்தப் பிழைச் செய்திகளை விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டால், நாம் இலக்கு வைத்திடும் இணைய தளங்களில் பெரும்பாலான தளங்களைப் பிற வழிகளில் அணுகிப் பார்த்து விடலாம் என்பதே உண்மை.
நாம் சந்திக்கும் பிழைச் செய்திகளில் முக்கியமான சில குறித்து இங்கு காணலாம்.நம் இணைய அணுகலில், தவறாகச் செல்கையில், நம் பிரவுசர் என்ன நிகழ்கிறது என்பதை நமக்குச் சுட்டிக் காட்டுவதே இந்த பிழைச் செய்திகளாகும். இவற்றில் எப்போதும் ஓர் எண் காட்டப்படும். எடுத்துக்காட்டாக ‘404’ மற்றும் ‘500’ என இருக்கலாம். இந்த எண்களுடன் சுருக்கமாக சிறு விளக்கமும் அளிக்கப்படும். ஆனால், அது நமக்குப் புரியாததாக இருக்கலாம். இந்த பிழைகளில் பெரும்பாலானவற்றை நாம் சரி செய்து நம் தேடல் முயற்சியைத் தொடரலாம். எனவே, இவை என்ன சொல்ல வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியை இங்கு மேற்கொள்ளலாம்.
எண் 400 வரிசையில் பல பிழைச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் நான்கு பிழைச் செய்திகள் நாம் அடிக்கடி சந்திப்பவையாக உள்ளன.
அவை:
1. 400 – பிழையுள்ள வேண்டுகோள் (Bad Request): நீங்கள் அனுப்பிய, இணைய தளத்திற்கான விண்ணப்பம் அல்லது வேண்டுகோள் சரியான முறையில் அனுப்பப்படவில்லை. நீங்கள், அந்த இணைய தளத்தின் முகவரியைச் (URL) சரியாக அமைத்து உள்ளீடு செய்தீர்களா எனச் சரிபார்க்கவும். அல்லது குறிப்பிட்ட இணையப் பக்கத்தினை புதுப்பித்தும் (Refresh) பார்க்கலாம். நீங்கள் உங்கள் வேண்டுகோளை அனுப்பியபோது, உங்களின் இணைய இணைப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தால், இந்த பிழைச் செய்தி பெற வாய்ப்புண்டு.
2. 401 – உரிமையற்றது (Unauthorized): இந்த செய்தியே உங்களுக்கு அதன் தன்மையை விளக்குகிறது. இந்த செய்தியை நீங்கள் பெற்றால், குறிப்பிட்ட இணைய தளத்தினைப் பெற, உங்களுடைய இணைய முகவரிக்கு உரிமை இல்லை. அல்லது நீங்கள் தந்த தகவல்கள் இதற்கானவை இல்லை. அல்லது இதில் லாக் இன் செய்து, தளத்தினுள் செல்ல உங்களுக்கு உரிமை இல்லை. இது போன்ற பிழைச் செய்தி கிடைக்கும் பட்சத்தில், முயற்சியைக் கைவிடுவதே நல்லது. ஏனென்றால், அந்த இணையப் பக்கம் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
3. 404 – காணப்படவில்லை (Not Found): நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு பொதுவான பிழைச் செய்தி இது. நீங்கள் காண விரும்பும் பக்கம் அல்லது இணைய தளம், இணையத்தில் காணப்படவில்லை. நீங்கள் அமைத்துள்ள முகவரியினைச் சரி பார்க்கவும். ஒருமுறைக்கு இருமுறையாக அதனை நுணுக்கமாகச் சரி பார்க்கவும். அதன் பின்னரும், குறிப்பிட்ட இணைய தளம் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளத்திற்கான முகவரி இது இல்லை என்றாகிறது. அந்த இணையப் பக்கத்தின் முதன்மைத் தளப் பக்கத்தினை (home page) அணுகிப் பின்னர் நீங்கள் விரும்பும் பக்கத்தினைப் பெறுவதற்கான வழிகளை ஆய்வு செய்து, பக்கத்தைக் காண முயற்சிக்கவும்.
4. 408 – விண்ணப்ப நேரம் கடந்துவிட்டது (Request Timeout): நீங்கள் ஓர் இணைய தளத்திற்கான முகவரியை அமைத்து, அதனைப் பெற்றுத் தர உங்கள் பிரவுசரை இயக்குகையில், உங்கள் பிரவுசர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, சில குறியீடுகளை அனுப்புகிறது. இந்த அழைப்புக் குறியீடுகள், பல சர்வர்களைக் கடந்து சென்று, உங்களுக்கான இணைய தளம் உள்ள சர்வரைச் சென்றடைந்து, பின் அந்த சர்வர் தரும் தகவல்களை உங்களுக்கு அளிக்கிறது. இதற்கு, உங்கள் பிரவுசர் குறிப்பிட்ட கால வரையறையை அமைத்துக் கொள்கிறது. குறிப்பிட்ட அந்தக் கால வரையறை கடந்தும், உங்களுக்கான இணைய தளம் குறித்த தகவல் பிரவுசருக்கு அனுப்பப்படவில்லை எனில், “காலம் கடந்துவிட்டது” என்ற பிழைச் செய்தியை பிரவுசர் உங்களுக்குத் தெரிவிக்கிறது. இந்த பிழைக்குக் காரணம், உங்கள் பக்கமும் இருக்கலாம்; இணைய தளத்தினைக் கொண்டுள்ள சர்வர் பக்கமும் இருக்கலாம். சிறிது காலம் காத்திருந்து, பிரவுசரை புதுப்பிக்கும் வகையில் ரெப்ரெஷ் செய்தால், ஒரு வேளை, குறிப்பிட்ட தளம் கிடைக்கலாம். இல்லை எனில், முயற்சியைச் சிறிது காலம் சென்று மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து 500 என்ற எண்களைத் தாங்கி வரும் பிழைச் செய்திகளைப் பார்க்கலாம். 500 என்ற எண் சார்ந்து வரும் பிழைச் செய்திகள் கிடைத்தால், அது நீங்கள் பார்க்க விரும்பும் இணைய தளங்களைக் கொண்டுள்ள சர்வரிடம் உள்ள பிழை சார்ந்ததாகவே இருக்கும். எனவே, இதனை நாம் சரி செய்திட முடியாது. இந்த வகையான பிழைச் செய்திகள், குறிப்பிட்ட நேரத்திலோ, அல்லது குறிப்பிட்ட பக்கங்களைக் காண முயற்சி செய்கையிலோ கிடைக்கப் பெற்றால், அந்த தளத்தின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, உங்களுக்குக் கிடைக்கும் பிழைச் செய்தி குறித்து தெரிவிக்கவும். இந்த வகையில் நாம் பெறக் கூடிய சில பொதுவான பிழைச் செய்திகளை இங்கு காணலாம்.
1. 500 – சர்வர் அமைப்பு பிழை (Internal Server Error) : இது சர்வரின் கட்டமைப்பு சார்ந்த பிழையைச் சுட்டிக் காட்டுகிறது. பிழை என்னவென்று, துல்லிதமாக இதில் அறிய முடியாது.
2. 502 – மோசமான வழித்தடம் (Bad Gateway): இந்த பிழைச் செய்தி கிடைத்தால், உங்கள் பிரவுசருக்கும், இணைய தளம் உள்ள சர்வருக்கும் இடையேயான வழியில் உள்ள இரண்டு சர்வர்கள் சரியாகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. இந்த பிழை, இணைய தளத்தில் ஒரு புதிய பக்கம் ஒன்றை பிரவுசருக்கு அனுப்பும் போது ஏற்படலாம். அல்லது அந்த சர்வரில் லாக் இன் செய்திடும்போது ஏற்படலாம். அல்லது ஏதேனும் பொருட்கள் வாங்க ஓர் இணைய தளத்தை அணுகும்போது கிடைக்கலாம்.
3. 503 – சேவை கிடைக்கவில்லை (Service Unavailable): இந்த பிழைச் செய்தி தற்காலிகமானதாகவோ, அல்லது வெகு காலத்திற்குக் காட்டப்படும் வகையிலோ இருக்கலாம். “இப்போதைக்கு இந்த இணைய தளம் உங்களுக்குக் கிடைக்காது” என்பதே இதன் பொருள். எனவே, மிகவும் அவசரமாக இதனைக் காண வேண்டும் என்றால், சில மணி நேரம் கழித்து இதனைக் காண முயற்சிக்கலாம். இல்லை எனில், சில நாட்கள் கழித்து முயற்சிக்கலாம்.
4. 504 – வழித்தட நேரம் கடந்துவிட்டது (Gateway Timeout): இது பிழைச் செய்தி 408 போன்றது. “நேரம் கடந்துவிட்டது” என்பது இங்கு இரண்டு சர்வர்களுக்கிடையே ஏற்படும் பிரச்னை. உங்கள் கம்ப்யூட்டருக்கு இதில் பங்கில்லை. ஏதேனும் ஒரு சர்வர் தன் இயக்க நிலையினை இழந்திருக்கலாம். சில மணித்துளிகளிலோ அல்லது சில மணி நேரங்கழித்தோ, இந்த தளம் இயக்கப்படலாம்.
பிறவகை பிழைச் செய்திகள்
பிழைச் செய்திகள் எப்போதும் ஓர் எண்ணுடன் வருவதில்லை. சில வேளைகளில், தகவல்களுடன் ஒரு பிழைச் செய்தி தரப்படலாம். இவற்றை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இப்படிக் கிடைக்கும் பிழைச் செய்திகளில் பொதுவான சிலவற்றை இங்கு காணலாம்.
சான்றிதழ் பிழைகள் – (Certificate errors): நீங்கள் அணுக விரும்பும் இணைய தளம் தான் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளங்களைக் காட்டி, அதற்கெனச் சான்றிதழ் வழங்கும் அமைப்பிடம் பாதுகாப்பு சான்றிதழ் பெறவில்லை. அல்லது ஏற்கனவே பெற்றிருந்த சான்றிதழின் காலக்கெடு முடிந்திருக்கும். இந்த தளத்தினை ஏதேனும் ஹேக்கர்கள் கைப்பற்றி இருந்தாலும், இத்தகைய பிழைச் செய்தி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இது போன்ற இணைய தளங்களை அணுகாமல் இருப்பதே நல்லது. இந்த பிழை சரி செய்யப்பட்டு, சரியான சான்றிதழை இந்த தளம் பெற்ற பின், இதனைப் பார்ப்பது நல்லது. முடியுமானால், இந்த தளத்தின் உரிமையைப் பெற்றவருடன் தொடர்பு கொண்டு இதனைத் தெரிவிக்கலாம். அல்லது பிழை என்னவென்று அறியலாம். அது உண்மையிலேயே சான்றிதழ் குறித்ததா அல்லது தவறான பிழைச் செய்தி தரப்படுகிறதா என அறிந்து அதற்கேற்ப செயல்படலாம்.
பாதுகாப்பு எச்சரிக்கைகள் – (Security warnings): அனைத்து பிரவுசர்களும் பாதுகாப்பு தருவதற்கான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரவுசர் பயனாளர்களை, தங்கள் வாடிக்கையாளர்கள் நலன் காக்கவே இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. இதன் மூலம், வழக்கமாக மால்வேர் அல்லது ஸ்கேம் செய்திகளைப் பரப்பும் தளங்களிடமிருந்து பாதுகாக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படும். உங்கள் பிரவுசரின் பாதுகாப்பு அமைப்பை மிக உயர் நிலையில் (High) அமைத்திருந்தால், இந்த பிழைச் செய்தி அடிக்கடி கிடைக்கும். நீங்கள் செட் செய்துள்ள அளவிற்கு பாதுகாப்பான வழிகளை, நீங்கள் பார்க்க விரும்பும் தளம் கொண்டிருக்காது என்பதே இதன் பொருள். இது போன்ற பிழைச் செய்தி அடிக்கடி பெறுவதைக் குறைக்க விரும்பினால், உங்கள் பிரவுசரின் பாதுகாப்பு அமைப்பினை, மத்திய அல்லது கீழ் நிலையில் (Low or Medium) அமைக்கலாம். எப்போது உங்கள் பிரவுசர் இது போன்ற ஒரு பிழைச் செய்தியினைத் தருகிறதோ, அந்த இணைய தளத்தினை அணுகாமல் இருப்பதே நல்லது. அப்படி அணுகினால், உங்களிடம் மிகச் சக்தி வாய்ந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும், மால்வேர் தடுப்பு செயலி இருந்தாலும், உங்கள் கம்ப்யூட்டருக்கு மால்வேர் அல்லது வைரஸ் வரும் வாய்ப்புகள் உண்டு.
இது போன்ற பிழைச் செய்திகள், நீங்கள் அமைத்துள்ள ப்ளக் இன் அல்லது ஆட் ஆன் புரோகிராம்களாலும் கிடைப்பதுண்டு. இவ்வாறு பிரச்னைகளைத் தரும் ப்ளக் இன் புரோகிராம்களை அடையாளம் கண்டு நீக்கிவிடுவதும் நல்லது. பின்னர், தேவைப்படும்போது மட்டும் அதனை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
சில வேளைகளில், ஒரு குறிப்பிட்ட தளத்தினை இணைப்பு பிரச்னைகளால் பெற முடியவில்லை எனச் செய்தி கிடைத்தால், அதே அமைப்பில், வேறு ஒரு தளத்தை அணுக முயற்சிக்கவும். அப்போதும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் நெட்வொர்க் அமைப்பில் தான் தவறு இருப்பது உண்மையாகிறது. உங்களுடைய இணைய இணைப்பினைச் சரி பார்க்கவும். சரி செய்திட முடியவில்லை என்றால், உங்களுக்கு இணைய இணைப்பினைத் தரும் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தினை அணுகவும்.

Saturday, March 22, 2014

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை



வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…  SWYC
 —  with Shavinesh Prasad

Saturday, October 5, 2013

பென்டிரைவ இப்படி பார்மேட் பண்ணுங்க..

இன்று கம்பியூட்டர் வைத்திருக்கும் அனைவரிடமும் இருப்பது பென்டிரைவ் என்ற ஒரு பொருள் தான் தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது பென்டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும்

கணினியில் பென்டிரைவைஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.

காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.

ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்


பென்டிரைவ் பார்மேட்

முதலில் பென்டிரைவை உங்கள் கணிணியில் சொருகி கொள்ளுங்கள்.

அதன் பிறகு Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.


இப்பொழுது பென்ட்ரைவ் எந்த டிரைவில் உள்ளது எனப்பாருங்கள். My Computer ஐ திறப்பதன் மூலம் இதை கண்டறியலாம்.


உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

attrib -h -s -r /s /d *.*

என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.


இப்போது Enter அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.


Sunday, August 11, 2013

உங்கள் கணினியின் வன்பொருள்களை பற்றி அறிய ஒரு மென்பொருள்

உங்கள் கணினி வன்பொருள்களில் ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது அதை நிவர்த்தி செய்ய அல்லது உங்கள் கணினி வன்பொருள்கள் பற்றி கற்றுக்கொள்ள, உங்ளுக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம் பயனுள்ளவையே. HWiNFO என்கின்ற புதிய மென்பொருள், உங்கள் கணினி வன்பொருள்கள் பற்றி நீங்கள் கேள்விப்படாத விடயங்களை எல்லாம்கூட காட்டும்.
இந்த மென்பொருளிலுள்ள முக்கியமான வசதி என்னவெனில், நிகழ்நிலையில் உள்ள வெப்பநிலை, மின்சாரம் பயன்படுத்தப்படும் அளவு என்பனவற்றைக் கூட வெளிக்காட்டும் என்பதுதான்.
இலவசமான இந்த மென்பொருளை உடனே சென்று தரவிறக்கிக் கொள்ளுங்கள் : www.hwinfo.com

Wednesday, July 24, 2013

கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய சில வழிகள்!

கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய சில வழிகள். கணினியில்
ஏற்படும் பல தவறுகளை கண்டறிந்த பின், அதற்கு தீர்வைத் தேடுவது 
சுலபமான விரைவான முறை ஆகும். இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே 
தெரிந்தவைதான் என்பவர்கள் தவிர, மற்றவர்கள் படிக்கலாம். 
சில தினங்களுக்கு முன்னர் கணினி செயல்முறைப் பரீட்சை ஒன்றில்
தரப்பட்ட கேள்விகளில் இருந்து தொகுத்து தரப்படுகிறது.

1.event Viwer இல் உள்ள log இல் என்ன error எனக் காட்டப்பட்டுள்ளது 
   என்பதைக் கண்டு திருத்திக் கொள்வது.

Start -Controlpanel – Administrative Tools -Event Viewer (அல்லது View event logs)

அல்லது

 start – run இல் eventvwr.msc என்பதைக் கொடுக்கவும்.

2.Start -Control Panel -மேலே உள்ள address bar இல் controlpanel ற்குப் அருகே 
   உள்ள அடையாளத்தைக் சொடுக்கி(அல்லது view by பக்கத்தில் உள்ள 
   அடையாளத்தை சொடுக்கி small icons என்பதை தெரிவு செய்யலாம்) வரும் 
   பட்டியலில் Troubleshooting என்பதை தெரிவு செய்யலாம்.

3.முதலில் மால்வெயர் ஸ்கன் செய்து கொள்ளவும். அதற்கு start – run இல்
   mrt என்பதைக் கொடுக்கவும்.

4.Control Panel -All Control Panel Items-Performance Information and Tools -Advanced Tools 
   இங்கே சென்றால் என்ன தவறு என்பதைக் காட்டும்.Fix error சரி செய்யலாம்.

5.CPU,Disk,RAM,Network போன்றவை எப்படி வேலை செய்கிறது எவ்வளவு
   பயன்படுத்துகிறது என்பதைக் காண start – run -perfmon.exe /res என்பதைக் 
   கொடுக்கவும்.

6.இங்கே சென்று தற்காலிக சேமிப்புக்களை அழிக்கலாம்..start – run – %temp%

7.OS இன்ஸ்டால் செய்யும் போதே startup disk,repair disk தயாரித்து 
   வைத்திருந்தால் பல தவறுகளை சுலபமாக சரி செய்து விடலாம்.

8.start -run – chkdsk …….disk இல் தவறுகளைக் கண்டறிந்து திருத்துகிறது.

9.start -run – perfmon.msc (perfmon) கொடுத்து அல்லது அங்கே உள்ள 
   open Resource manager சென்று free  space,Ram,வேலை செய்து கொண்டிருக்கும்
   ப்ரொகிராம்களை கண்டறியலாம்.தேவையற்றவற்றை நீக்கலாம்.

இங்கே Reliablity Monitor ஐயும் (expand) Reliability and Performance- Monitoring Tools,
 -Reliability Monitor. அல்லது start -run- perfmon /rel இங்கே அனைத்து 
பிழைகளையும் திகதியிட்டுக் காட்டும்.அத்துடன் அதற்குரிய தீர்வையும் 
காட்டும்.

10.சிஸ்டம் தவறுகளை திருத்திக் கொள்ள- start -run – sfc. /scannow கொடுத்து 
    சரி செய்யலாம்.

11.start – run இல் msconfig கொடுத்து தேவையற்ற startup program களை நீக்கலாம்.
     இங்கிருந்து safemode ஐயும் தொடங்கலாம்.

12.start – run – cleanmgr கொடுத்து தேவையற்ற files,empty folder,dup.folder 
    போன்றவற்றை அழித்து கணினியை விரைவு படுத்தலாம்.

13.கணினியில் தவறு ஏற்படும் போது அனேகமான சந்தர்ப்பங்களில் error code 
     சேர்ந்து வரும்.அதைக் குறித்துக் கொண்டால் பிழைகளை கண்டறிந்து 
     சுலபமாக சரி செய்து கொள்ளலாம்.

ப்ரௌசரில் 400,403,404,500 இப்படியும்; விண்டொஸ் (உ+ம்.601-உங்களுக்குத் 
தெரியாமலேயே ஒரு செய்ல் கணினியில் நடந்து கொண்டிருப்பதால் 
கணினியை மூட முடியாமல்,வேறு ஒன்றை திறக்க முடியாமல்,
இணையத்தை தொடக்க முடியாமல்); போன்ற error code தெரிந்து கொண்டால் 
சரி செய்வது சுலபம்.

14.start – run – devmgmt.msc கொடுத்தால் device manager வரும்.அங்கே view இல்
    சென்றால் ghosted devices (hidden devices ) காட்டும்.அதில் பல நமக்குத் 
    தேவையில்லாதவை.(எது தேவை எது தேவையில்லாதவை என்று 
    தெரியாமல் களத்தில் இறங்கினால் ஆபத்து.)

15.தேவையற்ற மென்பொருட்களை தரவிறக்காதீர்கள்.அவை கணினி 
     வேகத்தைக் குறைப்பதுடன், மால்வெயர் களும் வந்து விடலாம்.
     வேகத்தை அதிகரிக்க மென்பொருட்களை நாடாமல்,அவை 
     இல்லாமலேயே, நாமாகவே வேகத்தை அதிகரிக்க முயல வேண்டும்.
     சிறிய மாற்றங்களை system ,registry இல் செய்வதன் மூலம் வேகத்தை 
     சிறிது,சில bytes,அதிகரிக்கலாம்.

16. மேலே சொன்னவை தவிர,System checkup என்ற மென்பொருள் மூலம் 
      கணினி,நெட்வேர்க் பிழைகளைக் கண்டறிந்து சரி செய்து கொள்ளலாம்.
      (பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் மட்டுமே தானாக சரி செய்யும் 
      வசதி கொண்டது.) இலவச மென்பொருளில் error details முழுவதும் 
      காட்டப்படும்.அவற்றை நாமே சரி செய்து கொள்ளலாம்.

Saturday, July 13, 2013

IP Address (Internet Protocol) என்றால் என்ன?

ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் 
ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். 
அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங்காணப்படுகின்றன 
இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. 
இங்கு IP என்பது Internet Protocol எனபதைக் குறிக்கிறது.


அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை
மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம்
வழங்கப் படமாட்டது. இதனை ஆங்கிலத்தில் Uniqueness எனப்படுகிறது.

இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த  
IPமுகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது. 
இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் 
இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,

இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை
இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான
(Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.

ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். 
இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு 
பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான
ஒரு இலக்கமாக இருக்கும்.

ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது 
வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே 
புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 
எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ள இந்த நான்கு 
பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.

பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் 
கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு 
எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் 
கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் 
கருதப்படுகின்றன.

இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு 
நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட 
ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை 
உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான 
இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 
வெவ்வேறான சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். 
அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் 
கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்.

Monday, May 27, 2013

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.

புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !

புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.

உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !

ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.

இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.

தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !

பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.

இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !

புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !